என்னை பற்றி சிறு குறிப்பு


நான் என் வாழ்க்கையில் சிறு வயது முதல் பருமனாக  இருந்திருக்கிறேன், என் குழந்தை பருவத்திலிருந்து எடையை குறைக்க எவ்வளவோ  முயற்சித்திருக்கிறேன் . உடற்பயிற்சி செய்து பார்த்தேன், நடைபயிற்சி செய்து பார்த்தேன், டயட்டில் இருந்தேன், யோகா செய்தேன், ஆனால் எடை  ஒருபோதும் கீழே இறங்கவில்லை. டிசம்பர் 2016 ல் என் கணவரின் நண்பர்களில் ஒருவர்  நியாண்டர் செல்வன் அவர்கள் எழுதிய  ஒரு புத்தகத்தை எங்களுக்கு கொடுத்தார். இது குறைந்த மாவு சத்து உணவு பற்றிய புத்தகம். முதலில் அதை படித்த போது கட்டாயமாக முடியாது என்று நினைத்து கொண்டேன் . அரிசி இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது என்பது என் எண்ணம். ஆனால் என் மாமனார்  உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த போது எங்களால் ரத்தம் கூட கொடுக்க இயலவில்லை. அப்போதுதான் எங்கள் வாழ்வுமுறையை  மாற்றியமைக்க முடிவு செய்தோம். ஒரு 10 வயது குழந்தைக்கு பெற்றோராக இருந்து கொண்டு ஆரோக்யமாக இல்லையென்றால் அந்த குழந்தைக்கு நாம் சரியான வழிகாட்டுதல் கொடுக்க முடியாது.  அன்றே ஆரோக்யமான பெற்றோராவது என்று முடிவு செய்து பேலியோ முறைக்கு மாறுவது எண்டு முடிவெடுத்தோம். இந்த குறை மாவு சத்து உணவிற்கு மாறுவதற்கு உடல் எடை குறைப்பு பிரதானமில்லை, ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ ஒரு திட்டம். இரண்டு வாரங்களில், உடல் நலத்தில்  ஆச்சர்யகரமான  வித்தியாசத்தை நாங்கள் கண்டோம். பிறகு எங்களால்  நிறுத்த முடியவில்லை. நான் சென்ற ஒரு வருடத்தில் இருபத்திரண்டு கிலோ குறைந்திருக்கிறேன். கணவர் கூட இந்த ஆண்டு கிட்டத்தட்ட 20 கிலோ இழந்துள்ளார். இப்போது நாம் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை பின்பற்றி  வருகிறோம். முதலில் நான் தானியங்கள் இல்லாமல் சமையல் செய்ய மிகவும்  போராடினேன். அவை இல்லாமல் எந்த உணவையும் பற்றி யோசிக்க முடியாது போல் நினைத்தேன். மெதுவாக தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் இல்லாமல் சமைக்க கற்று கொண்டேன். சில நாட்களில் நான் தென் இந்திய உணவுகளை அதன் குறைந்த மாவு சத்து  வடிவத்தில் மீண்டும் உருவாக்க முடிந்தது. இந்த வலைப்பதிவு எல்லா உணவு குறிப்புகளையும் பாதுகாக்க என் முயற்சி. குறைந்த மாவு சத்து  உணவு முறையை தொடங்கும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தயவு செய்து உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள், நீங்கள் எந்தவொரு சமையல் குறிப்பையும் முயற்சி செய்தால், அது எவ்வளவு நன்றாக இருந்தது என்று என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்

  • Share: